நில பட்டா மாற்றம் செய்ய ரூ.8,000 லஞ்சம்: விழுப்புரம் வி.ஏ.ஓ கையும் களவுமாக கைது! கலியுக நாரதர் மாத இதழ் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் வீ.வீரராகவன்
நில பட்டா மாற்றம் செய்ய ரூ.8,000 லஞ்சம்: விழுப்புரம் வி.ஏ.ஓ கையும் களவுமாக கைது!
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாபந்தி கூட்டத்தின் போதே, ஒட்டை கிராம நிர்வாக அதிகாரி (VAO) கலைச்செல்வி, நிலப் பட்டா மாற்றம் செய்து தருவதற்காக ரூ.8,000 லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், தனித்தாசில்தார் காதர் அலி தலைமையில் சமாபந்தி கூட்டம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், வானூர் அருகே உள்ள ஒட்டை கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பவரின் நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்து தருவதற்காக, அக்கிராமத்தின் வி.ஏ.ஓ கலைச்செல்வி ரூ.8,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரபு, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் வழங்கி, அதனை வி.ஏ.ஓவிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.
அதன்படி, சமாபந்தி கூட்டத்திற்கு வந்த பிரபு, ரசாயனம் தடவிய பணத்தை கலைச்செல்வியிடம் வழங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி, பணத்தை கையும் களவுமாக பெற்றுக்கொண்ட நிலையில் கலைச்செல்வியை கைது செய்தனர்.
காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் கே.வி. கலைச்செல்வம் மற்றும் விழுப்புரம் ஊழல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஈஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ கலைச்செல்வியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற சமாபந்தி கூட்டத்தின் போதே இந்த கைது சம்பவம் நிகழ்ந்ததால், வானூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



