மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரவில்லையா? உடனே இதை பண்ணுங்க
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021ஆம் ஆண்டில், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, 2023ஆம் ஆண்டு முதல் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” என்ற பெயரில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு நிதி உதவி வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தொடக்கத்தில் சுமார் 1.16 கோடி பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்தனர். தற்போது பயனாளிகளின் எண்ணிக்கை 1.31 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், நேற்று காலை இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டது. இதனால் பல பெண்கள் மகிழ்ச்சி அடைந்து அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 சேர்த்து மொத்தம் ரூ.5,000 வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் உரிமைத்தொகையை ரூ.1,000 இலிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்குவோம் எனவும் உறுதி அளித்தார்.
வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டதும் பலர் பணத்தை பெற வங்கிகளுக்கு திரண்டனர். அதே நேரத்தில், சில பெண்களுக்கு இந்த தொகை வராததால் ராணிப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
மாதந்தோறும் ரூ.1,000 பெற்று வரும் பயனாளிகளுக்கு ரூ.5,000 வராதிருந்தால், அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கலாம் அல்லது cmhelpline.tnega.org என்ற இணையதளத்தின் மூலம் புகார் அளிக்கலாம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.



