புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.289.38 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கட்டடங்கள், சாலை மற்றும் பாலங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.289.38 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கட்டடங்கள், சாலை மற்றும் பாலங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (06.02.2026) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 42 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 சமத்துவபுரங்கள், நாமக்கல் மாவட்டம், புதுப்பட்டி முதல் கெடமலை வரை 34 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலை, 212 கோடியே 86 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடங்கள், பாலங்கள், அங்கன்வாடி கட்டடங்கள், பள்ளிக் கட்டடங்கள், சமுதாயக்கூடங்கள், பொது விநியோகக் கடைகள், என மொத்தம் 289 கோடியே 38 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கடையக்குடி ஊராட்சியில் ரூ.6.71 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட அளவிலான அலுவலகங்களை ஒருங்கிணைக்கும் வகையில் ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்கள் ஆகியவற்றின் திறப்பு விழா நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டார்.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஏழை, எளிய பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திடும் வகையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், சமூக நீதியை மேம்படுத்தவும், தந்தை பெரியாரின் சமுதாய சமத்துவ கொள்கையினை பரப்புவதும் சமத்துவபுரம் அமைப்பதன் முக்கியமான நோக்கமாகும். இங்கு 100 வீடுகள் கட்டப்பட்டு 40:25:25:10 என்ற விகிதாச்சார அடிப்படையில் முறையே ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர வகுப்பின மக்கள் குடியமர்த்தப்படுகிறார்கள்.
ஒரு சமத்துவபுரத்தில் 100 வீடுகள் அமைப்பதோடு, சாலைகள், குடிநீர் விநியோகப் பணிகள் மற்றும் தெருவிளக்கு போன்ற பொது உட்கட்டமைப்பு வசதிகளுடன், தேவையின் அடிப்படையில் பொது விநியோகக் கடை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கடையக்குடி ஊராட்சியில் 6 கோடியே 71 இலட்சம் ரூபாய் செலவில்
கட்டப்பட்டுள்ள சமத்துவபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட அளவிலான அலுவலகங்களை ஒருங்கிணைக்கும் வகையில், பல்வேறு அலுவலர்களுக்கு தனித்தனி அறைகளுடன் புதுக்கோட்டையில் 10 கோடி ரூபாய் செலவில், 28,716 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகக் கட்டடம் ஆகியவை இன்றையதினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய பொதுமக்களின் நலனிற்காக செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்களை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.பா.ஜெயசுதா, செயற்பொறியாளர் திரு.ஆர்.பார்த்திபன், அரிமளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.அ.அருண்முருகானந்தம், திருமதி.ஆர்.பேபிராணி, வீட்டுவசதி வாரிய உறுப்பினர் திரு.வி.ஆர்.இளையராஜா, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் திருமதி.மேகலா முத்து, திரு.பொன்ராமலிங்கம், உதவிப்பொறியாளர் திரு.சி.சுரேஷ் பாபு, ஒப்பந்ததாரர் திரு.எம்.பி.எஸ்.பாரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.



