புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த நாதஸ்வர வாத்திய கலைஞர், மருத்துவர்கள் முன்பாக தனக்கு கை கால்கள் சரியாகி விட்டது உணர்த்தும் வகையில் நாதஸ்வரத்தை வாசித்து காண்பித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த நாதஸ்வர வாத்திய கலைஞர், மருத்துவர்கள் முன்பாக தனக்கு கை கால்கள் சரியாகி விட்டது உணர்த்தும் வகையில் நாதஸ்வரத்தை வாசித்து காண்பித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு புறநோயாளிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், உள்நோயாளிகளாக 500க்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு ஆலங்குடி அருகே கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த நாதஸ்வர வாத்திய கலைஞர் பாலசுப்ரமணியன் (42) கடந்த சில மாதங்களுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் உடனடியாக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். 10 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இடது கால், கை முழுவதுமாக சீரானது. இன்று பாலசுப்ரமணியன் மருத்துவ கல்லூரிக்கு மருத்துவர்களை சந்திக்க வந்த நிலையில் தனது இடது கால் மற்றும் கையில் எந்த பாதிப்பும் இல்லை என எடுத்துரைக்கும் வகையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் கலைவாணி மற்றும் சக மருத்துவர்கள் மத்தியில் நாதஸ்வரத்தை வாசித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
இது தொடர்பாக பேசிய பாலசுப்ரமணியன், மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சைகள் வழக்கம்போல் நாதஸ்வரம் இசைக்க முடிவதாகவும், வழக்கம்போல தனது பணிகளையும் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதேபோன்று அவரது மனைவி விஜயலட்சுமி கூறுகையில், தனது கணவர் நாதஸ்வர வித்துவான், அவருக்கு திடீரென ஒரு கையும் காலும் செயலிழந்து விட்டது. உடனடியாக அவர் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம், அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு பத்து நாட்களுக்கு பிறகு உடல் நலம் முழுவதும் சீரானதாகவும், தற்போது நாதஸ்வரம் வாசிப்பது போன்ற தனது இயல்பான பணிகளை அவர் செய்து வருவதாகவும், சிறப்பாக உதவிய மருத்துவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இதேபோன்று பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட பெருங்களூர் அருகே பெரியதம்பிஉடையான்பட்டி பகுதியைச் சேர்ந்த பவுலின் மேரி (48) மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று உடல் நலம் சீரானதும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். தனக்கு சிறப்பான சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
பத்திரிகையாளர் : வீ.வீரராகவன்



