புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழிற்கடன் வசதியாக்கல் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (17.12.2025) நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழிற்கடன் வசதியாக்கல் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (17.12.2025) நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (TWEES) என்ற புதிய திட்டம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் ஒரு இலட்சம் மகளிரை தொழில் முனைவோராக உயர்த்திடும் நோக்கத்துடனும் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கைவினை கலைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் நோக்கத்துடனும் கலைஞர் கைவினைத்திட்டம் என்ற திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. மேற்கண்ட இரு திட்டங்கள் தொடர்பான கடன் வசதியாக்கல் கூட்டம் இன்றையதினம் நடைபெற்றது.
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற பெண்கள் மட்டுமே தகுதியானவர்கள் ஆவார்கள். இத்திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சம் வரை 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.2.00 இலட்சம் வரை) மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 55 வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கல்வித்தகுதி தேவையில்லை இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு மானியத்தடன் கூடிய கடன் வசதி பெறலாம். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தினை சேர்ந்த பெண் தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.12.00 இலட்சத்திற்கான வங்கி கடன் ஒப்பளிப்பு ஆணைகள் மற்றும் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் 17 பயனாளிகளுக்கு ரூ.11.75 இலட்சத்திற்கான வங்கி கடன் ஒப்பளிப்பு ஆணைகள் வழங்கப்பட்டது.
மேலும், வங்கிகள் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வசதியாக்கல் செய்து தரப்பட்டு வங்கிக் கடன் ஒப்பளிப்பு வழங்கப்பட்டது. இதில் கனரா வங்கி 15 நிறுவனங்களுக்கு ரூ.1.50 கோடி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கி 5 நிறுவனங்களுக்கு ரூ.0.50 கோடி, பாரத ஸ்டேட் வங்கி 20 நிறுவனங்களுக்கு ரூ.1.20 கோடி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 18 நிறுவனங்களுக்கு ரூ.0.75 கோடி, இந்தியன் வங்கி 22 நிறுவனங்களுக்கு ரூ.1.30 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

வங்கி கடன் எளிமையான முறையில், விரைவில் ஒப்பளிப்பு மற்றும் பட்டுவாடா செய்து ஆண்டு இலக்கினை எய்திட வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 7 பயானாளிகளுக்கு ரூ.4.9 இலட்சம் மதிப்பீட்டில் நுண்தொழில் நிறுவன நிதிக்கடனுதவித் தொகைக்கான காசோலைகளும், தாட்கோ திட்டத்தின் சார்பில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் பழங்குடியினர் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு கணினி உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கு ரூ.9.6 இலட்சம் மதிப்பீட்டில் உதவித் தொகைக்கான காசோலையினையும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய அலுவலர்களை பாராட்டி, பாராட்டுச்சான்றிதழ்களையும் வழங்கினார்.
இக்கூட்டத்தில், பொதுமேலாளர் (மாவட்ட தொழில்மையம்) திரு.கிரீசன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் காரைக்குடி மண்டல மேலாளர் திரு. முகமது ஸ்ரேயர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.த.நந்தகுமார், நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் திரு.ஆர்.தீபக்குமார், மாவட்ட மேலாளர் (தாட்கோ) திருமதி.எல்.அனிட் விமலின், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் திரு.கே.செல்வம், மத்திய கூட்டுறவு வங்கி செயலாட்சியர்/ இணைப் பதிவாளர் திருமதி.மு.க.பாரதி,உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) திரு.கேப்டன்.சீ.விஜயகுமார், புதுக்கோட்டை மாநில வங்கி முதன்மை மேலாளர் திரு.ச.செந்தில் ராஜன், இந்தியன் ஓவர்ஸிஸ் வங்கி மேலாளர் திரு.எம். அஜய்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.



